கொல்கத்தா துறைமுகத்திலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்குப் பல்வேறு அமைப்புகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன.
இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் மத்திய அரசைக் கண்டித்து பலகட்ட போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
அதன்படி இன்று தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தலைமை அஞ்சலகம் அலுவலகம் முன்பு அந்த அமைப்பின் தென் மண்டல தலைவர் குமார் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
தற்போது கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் காவல் துறையின் உரிய அனுமதி இல்லாமல் ஒன்றுகூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதனால் தென்காசி - நெல்லை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.