தென்காசி: கடையம் அருகேயுள்ள முதலியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிந்தாம தார். இவரது வீட்டின் படிக்கு கீழ் ஏதோ ஒரு விலங்கினம் இருப்பது போல சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு படியின் கீழ் பார்த்தபோது சுமார் மூன்று அடி உடும்பு ஒன்று கிடந்துள்ளது. உடனே படிக்கட்டுகளை உடைத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு எவ்வித காயமின்றி அந்த உடும்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து சுமார் 3 அடி நீளமுள்ள அந்த உடும்பு, கடையம் ராமநதி பீட்டிற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
ஏற்கனவே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் 3 அடி நீளம் உள்ள உடும்பு பொதுமக்கள் வசிக்கும் வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி வியாபாரத்தில் புகுந்த நல்ல பாம்பு… சிதறி ஓடிய பொதுமக்கள்