தென்காசி: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குவது, தென்காசியில் உள்ள குற்றாலம். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். தற்போது குற்றாலம் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி இருக்கும் நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நாள்தோறும் குற்றால அருவிக்கு வருகை தந்து, புனித நீராடி விட்டு சபரிமலைச் சென்று வருகின்றனர்.
அப்படி குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள், குற்றாலம் பகுதியில் விற்பனை செய்யப்படும் சிப்ஸ், பேரிச்சம் பழம், அவல், பொரி உள்ளிட்ட பொருட்களை ஆவலுடன் வாங்கிச் செல்வது வழக்கம். மேலும், குற்றாலம் சன்னதி பஜார் முழுவதும், தற்போது ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகளவு நிறுவப்பட்டு, விற்பனையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளில் கெட்டுப்போன பலகாரங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரைத் தொடர்ந்து, தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நாக சுப்பிரமணியம், அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அந்த ஆய்வின்போது, குற்றாலம் காசி விஸ்வநாதர் கோயிலின் வடபுறம் உள்ள சன்னதி பஜாரில், சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பேரிச்சம் பழங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது, அந்த பேரிச்சம் பழங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில், கெட்டுப்போன பேரிச்சம் பழங்களாக இருந்தது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் இருந்த சுமார் 3 கடைகளில் இது போன்ற ஆய்வை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர். இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 1,060 கிலோ எடையுள்ள கெட்டுப்போன பேரிச்சம் பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன பேரிச்சம் பழங்களை, குற்றாலம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்து உள்ளனர்.
தற்போது முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், 24 மணி நேரமும் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.. துபாய் குருவிகள் சிக்கியது எப்படி?