தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து சீசன் களைகட்டும்.
இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி இரண்டு மாதங்களான நிலையில் விரல்விட்டு எண்ணக்கூடிய நாள்களில் மட்டுமே மழை பெய்தது.
இதனால் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் அவ்வப்போது இதமான காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் ஊரடங்கு தடை உத்தரவு இருப்பதால் பொதுமக்கள் வருகையை கண்காணிக்கும் வகையில் 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சீசன் சமயத்தில் வாழ்வாதாரம் இழந்த குற்றால வியாபாரிகள்