தென்காசி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கடையநல்லூர், சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்நிலை பாதிப்படைந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து சுற்றுலாப்பகுதிகளில் ஒன்றான தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் சீசன் காலம் முடிந்த பிறகும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்து அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்நிலையில் நேற்று (நவ.5) குற்றாலம் பகுதிகளில் பெய்த கனமழையால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்டவற்றில் நீர் வரத்து அதிகமாக ஏற்பட்டு பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அருவியில் அவ்வப்போது தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கும் ஏற்படுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்து திரும்பிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: தரமில்லாத சாலை.. கைகால் பெயர்த்தெடுத்த மக்கள்! அதிகாரிகள் 20% கமிஷன் வாங்குவதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு!