தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (65). விவசாயியான இவர் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் தோட்டத்து பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து அணைக்கரை முத்துவை வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது அணைக்கரை முத்துவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வனத்துறையினர் அவரை உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அணைக்கரை முத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள், ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு திரண்டு இச்சம்பவத்தில் தொடர்புடைய அலுவலர்களை கைது செய்யக்கோரியும், உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, லாக்கப் மரணம் என்று காவல்துறையினர் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.