நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை (2021) எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் வியூகங்கள் அமைத்து தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன.
அந்தவகையில், 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தையும் நடத்திவருகிறார். இதன் ஒரு பகுதியாக விடியலை நோக்கி 'ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் மாவட்டம் தோறும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகின்றனர் திமுக முன்னணி தலைவர்கள்.

தென்காசி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இரண்டாம் நாளாக நேற்று (டிச.30) பரப்புரை மேற்கொண்டார்.
தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற இந்தப் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், "அடிப்படை மனித உணர்வு உள்ள எவரும் புதிய வேளாண் சட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள்.

ஆனால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து குரல் கொடுக்க தைரியம் இல்லாத அதிமுக அரசு, பதவி வெறி காரணமாகத் தமிழ்நாட்டை டெல்லியில் அடகுவைத்து தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்துள்ளது" என்றார்.
அதிமுக ஆட்சியின் காரணமாக பத்து வருடமாக மக்கள் முகத்தில் மகிழ்ச்சி மறந்துள்ளதாகவும், இளைஞர்கள் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 23 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி தவித்துவருகின்றனர், அவர்களது கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. மேலும் முதலமைச்சர் பழனிசாமி, அவரது உறவினர்கள், அதிமுக கட்சிக்காரர்கள் லாபம் சம்பாதிக்க இந்த ஆட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். பதவிக்காக மோடி, அமித் ஷா காலில் விழுந்து கிடக்கும் இபிஎஸ், ஓபிஎஸ் என்று கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.