தென்காசி: சங்கரன்கோவில் அருகே பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியில் தேசிய மாணவர் படை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்வில் பேசிய கனிமொழி எம்பி, “தமிழ்நாட்டில் தான் அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது என்கிற பெருமையை, கல்லூரிகள் இருக்கிறது என்கிற பெருமையை, இந்த நாட்டிலே உயர்கல்விக்குப் போகக்கூடிய மாணவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமானது என்கிற பெருமையை உருவாக்கித் தந்தவர் தலைவர் கலைஞர் கருணாநிதி” எனத் தெரிவித்தார்.
பின்னர் கலைக்கல்லூரி மாணவிகள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பொறுமை தைரியம் இதில் எது முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு, “அனைத்து இடங்களிலும் தைரியத்துடன் செயல்பட வேண்டும், ஆனால் பொறுமையும் மிக முக்கியமான விஷயம். மாணவர்கள் இதேகேள்வியைக் கேட்டு இருந்தால் அவர்களுக்குப் பொறுமை முக்கியம் என்று கூறி இருப்பேன்.ஆனால் பெண்களுக்கு வழிவழியாகவே பொறுமை முக்கியம் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கின்றனர். அதனால் அந்த பொறுமையை விட்டுவிட்டு தைரியமாக இருங்கள். உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் தைரியமாகப் போராடுங்கள்.” எனத் தெரிவித்தார்.
திராவிட மாடலில் பெண்களின் பங்கு என்ன? என மாணவி கேட்ட கேள்விக்கு, “முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கர்ப்பிணிப்பெண்களும், கைக்குழந்தையுடன், 67 பெண்கள் சிறைக்குச் சென்றுள்ளார்கள். திராவிட மாடல் அரசு, ஆட்சி எல்லாமே பெண்களால் உருவாக்கப்பட்டது தான்.” எனப் பதில் அளித்தார்.
பெண்கள் அரசியலுக்கு வருவது பற்றி மாணவி ஒருவர் கேட்ட போது, “தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் அரசியலுக்கு வாருங்கள்” எனப் பதில் அளித்தார். தங்களின் மிகக் கடினமான தருணம் எது என்ற கேள்விக்கு, “தலைவர் கருணாநிதி எங்களோடு இல்லை என்ற தருணம் தான் எனது கடினமான தருணம்” எனப் பதில் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, கல்லூரி பேராசிரியர்கள், திமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் உட்பட மாணவ மாணவியர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திலே ஒன்றிய அரசு அளவிலே ஒரு ஆட்சி மாற்றம் வேண்டி எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ஒருங்கிணைப்பு மேற்கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக அது வெற்றி பெறும். நம்முடைய முதலமைச்சரும் அதில் ஒருங்கிணைந்துள்ளார்கள், அதுவும் வெற்றி பெறும்” என்று கூறினார்.