கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் தங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கக்கோரியும் கோயம்புத்தூர் மாவட்ட நடனக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனு அளிக்க வந்தவர்கள் எம்ஜிஆர், ரஜினி, சந்திரபாபு போன்றவர்களின் வேடமணிந்து வந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் செயலாளர் நீலகண்டன், 'வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். இதுபோன்ற நாடகம், நடனக் கலைஞர்களுக்கு ஒரு ஆண்டில் தொழில் காலம் என்றாலே ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரைதான். ஆனால், தற்போது ஊரடங்கு அமலாக்கப்பட்டதால், எவ்வித நாடகமும் இன்றி, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றோம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டதைப்போல, எங்களுக்கும் ஏதேனும் உதவிகள் வழங்கி உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அரசின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்து தந்தால், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, எங்களது வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்வோம்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க... நாடகக் கலைஞர்களுக்கு உதவிய விமல்
தென்காசி : தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவால், கிராமப்புறங்களில் உள்ள மேளம், நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள், வில்லிசைக் கலைஞர்கள் ஏராளமானோர் வருமானமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் கோயில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து அரசுக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதன் காரணமாக, மேளம் நாதஸ்வரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மூன்று மாதங்களாக வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஊரடங்குத் தளர்வு விதிக்கப்பட்டும்கூட கோயில் திருவிழாக்களுக்கு, தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், இத்தொழிலாளர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.
எனவே, தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதற்காக 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகம் வந்தனர். கூட்டமாக செல்ல காவல் துறையினர், அனுமதிக்காததால் குறிப்பிட்ட சிலர் மட்டும் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க... இசையால் செவி பசி தீர்த்தோர்- இன்று அவர்கள் பசிக்குத் தீர்வுதான் என்ன?