தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018 இல் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த ஆலையால் சுற்றுசூழல் மற்றும் அப்பகுதி மக்களின் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி நடைபெற்ற இப்போராட்டத்தின் 100வது நாளில் (மே 22) பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது நிகழ்த்தப்பட்ட கடும் வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சிலரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கி குண்டுகள் மிக அருகிலிருந்து சுடப்பட்டது தெரிய வந்தது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு இறந்த ஸ்னோலின்(18) என்ற இளம்பெண்ணின் தலையின் பின்பகுதியை துப்பாக்கிக் குண்டு துளைத்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்தது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனா். மேலும், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவிற்கு பின் பல அரசியல் கட்சித்தலைவர்கள் தூத்துக்குடிக்கு விரைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும், தங்களது இரங்கலையும் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிச்சுடு நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பில் இருந்து கோரிக்கைகளும் வலுத்தன. அதுமட்டுமின்றி இச்சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு அவைகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
இதையும் படிங்க : "விஜயின் கட்சி கொள்கை மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதாக இல்லாமல் அவரது கட்சியின் வளர்ச்சிகானதாக இருக்க வேண்டும்"- ஜி.கே வாசன் அறிவுறுத்தல்!
விஜய் ஆறுதல்: இந்நிலையில் நடிகா் விஜய் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பகலில் சென்றால் ரசிகா்கள் கூட்டம் கூடும் என்பதால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினாா்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகையும் வழங்கினார். இதில், ஸ்னோலின் குடும்பமும் அடங்கும். இத்துயர சம்பவம் நடைபெற்று ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் ஸ்னோலின் குடும்பத்தினர் தற்போது உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இதுகுறித்து, ஸ்னோலினின் தாயார் வனிதா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "அனைவரும் ஸ்னோலின் மறைவு குறித்து வேதனையுடன் வீட்டின் வாயிலில் அமர்ந்திருந்தோம். அப்போது திடீரென விஜய் வந்தார். எங்களுடன் சமமாக அமர்ந்து எங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார். மிகவும் துயரப்பட்டார். தாமதமாக வந்ததற்கு வருத்தம் தொிவித்தார்.
தொந்தரவு செய்திருந்தால் எங்களை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றார். மிகவும் எளிமையாக வந்து எங்கள் துக்கத்தில் பங்கெடுத்து சென்றார். விஜய் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு கடிதம் ஒன்றை கொடுப்பதற்கு நினைத்தேன்.
ஆனால் அங்கு பல லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியிருந்ததால் என்னால் கடிதத்தை கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. தற்போது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்சியில் உறுப்பினராகி விட்டோம். 2026ல் விஜயை முதலமைச்சராக அரியணையில் அமர்த்துவோம்" என்று உறுதிபட கூறுகிறார் வனிதா.
இதுகுறித்து, தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கூறுகையில், "மாநாட்டிற்கு பின்பு இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பலரும் கட்சியில் சேர ஆர்வமுடன் வருகை தருகின்றனர். கட்சி மிகவும் எழுச்சி பெற்றுள்ளது. ஆகவே, 2026ல் தமிழக முதலமைச்சராக விஜய்யை அமர்த்துவோம்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்