சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடந்த 6ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் (Chennai Grand Masters 2024) இன்றுடன்(நவ.11) நிறைவு பெற்றது. இந்த தொடரில் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
16 வீரர்கள்: மாஸ்டர்ஸ் பிரிவில் (Masters Category) இந்தியாவின் முதல் நிலை வீரரான அர்ஜுன் எரிகைசி, அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 8 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் 'சேலஞ்சர்ஸ் பிரிவில்' (Challengers Category) தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ரணீஸ், வைஷாலி, ப்ரணவ் உள்ளிட்ட 8 கிராண்மாஸ்டர்கள் பங்கேற்றனர்.
மொத்தம் ஏழு சுற்றுகள் ஆக நடைபெற்ற மாஸ்டர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், இந்தியா நம்பர் ஒன் வீரர் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் லெவோன் அரோனியன் ஆகிய மூவரும் 4.5 புள்ளிகளை பெற்று சமநிலையை எட்டினர்.
இருப்பினும் ஏழு போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காத அரவிந்த் சிதம்பரம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
டைபிரேக்கர்: இதனை தொடர்ந்து மற்ற இருவர்களில் இறுதி போட்டிக்கு சொல்வது யார் என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் முறையில் போட்டி நடைபெற்றது. இதில் அர்ஜுன் எரிகைசியும் - லெவோன் அரோனியனும் விளையாடினர். இந்த போட்டியில் 2-0 என்ற ஆட்ட கணக்கில் லெவோன் அரோனயன் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மாஸ்டர்ஸ் பிரிவில் அரவிந்த் சிதம்பரம் வெற்றி: இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 2-0 என்ற ஆட்டக் கணக்கில் லெவோன் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் அரவிந்த் சிதம்பரம். இதன் மூலம் முதல் முறையாக ஓபன் பிரிவில் சாம்பியன் வெற்றி அசத்தியுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: "சிஎஸ்கேவில் இன்னும் எத்தனை ஆண்டுகள் தோனி விளையாடுவார்?"- சிஇஓ காசி விஸ்வநாதன் பேச்சு!
சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் வெற்றி: நடப்பாண்டில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட சேலஞ்சர்ஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரணவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய மாஸ்டர் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். பட்டம் வென்ற பிரணவிற்கு 6 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது.
2 தமிழக வீரர்கள்: மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சாம்பியன் பட்டம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமையை தேடித் தந்துள்ளனர். இது குறித்து அரவிந்த் சிதம்பரம் கூறுகையில்," இதுவரை நான் சூப்பர் டோர்னமெண்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை.
பெரிய போட்டிகளில் வெற்றி பெற்று இருப்பது தான் முதல் முறை. போட்டியை ஏற்பாடு செய்து எனக்கு வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அர்ஜுன் எரிகேசியுடன் விளையாடுவது சவால் நிறைந்ததாக இருந்தது. இந்த தொடரில் வெற்றி பெற வேண்டும் என இருந்தேன் தொடரை வெற்றி பெற்று இருக்கிறேன். அதேபோல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வேன் என எதிர்பார்க்கவில்லை. 2013ல் சென்னை ஓபன் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன். அதே போல் மீண்டும் வெற்றி பெற்று இருப்பது சந்தோஷமாக இருக்கிறது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.