கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அரசனட்டி பகுதியில் ஸ்ரீ கிளினிக் & லேப் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு மருத்துவம் படிக்காத சிலர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தமிழ்நாடு முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் வந்துள்ளது.
இதனையடுத்து ஒசூர் அரசு மருத்துவமனை முதல்வர் ஞானமீனாட்சி, மருந்துக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் அரசனட்டி பகுதியில் இயங்கி வந்த கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த சிலம்பரசி (28) மற்றும் டி பார்ம் (Diploma in pharmacy) படித்த கௌரி(34) ஆகிய இருவரும் இணைந்து மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: "காலிப்பணியிடங்கள் 100% நிரப்பப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
இதனையடுத்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கிளனிக்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள் கௌரி, சிலம்பரசி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,"கிளினிக் நடத்த வேண்டும் என்றால் முறையான படிப்பு முடித்து அரசால் அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த நடைமுறையும் பின்பற்றாமல் கிளினிக் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.