தென்காசி: தென்காசி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (50). இவர் கடையநல்லூர் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் வனத் துறை ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இவரது மகன் சொக்கம்பட்டி பகுதியிலுள்ள கருப்பாநதி அணைக்கு குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த பொதுப்பணித் துறை ஊழியர்கள் அணைப் பகுதியை ஒட்டி குளிக்க அனுமதி இல்லை எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீடு திரும்பிய அவர், இது குறித்து தந்தையிடம் கூறியுள்ளார்.
உடனே வனத் துறை ஊழியர் செல்லத்துரை கருப்பாநதி அணை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு திரிகூடபுரம் பகுதியைச் சேர்ந்த புதியசேகர் (45) என்ற விவசாயி, விவசாய பணிகளை முடித்துவிட்டு தனது குடும்பத்தினருடன் குளித்துக்கொண்டிருந்துள்ளார்.
இதைப் பார்த்த செல்லத்துரை என் மகன் குளிக்க வரும்போது அனுமதி இல்லை எனக் கூறிய பொதுப்பணித் துறையினர் இப்போது இவர்களை எப்படிக் குளிக்க அனுமதித்தனர் எனக்கூறி கேள்வி எழுப்பியுள்ளார்.
'இதைச் சும்மா விட மாட்டான்' எனக் கூறிய செல்லத்துரை தனது செல்போனில், விவசாயி புதிய சேகர் குடும்பத்தினரை காணொலி எடுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த புதிய சேகர் செல்லத்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கைகலப்பு ஆனதாகக் கூறப்படுகிறது. இருவரும் தகாராறில் ஈடுபட்டதில் காயம் ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காவல் நிலையத்தில் புகார்
இந்த நிலையில், விவசாயி புதிய சேகர் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், தனது மனைவி குளிக்கும்போது செல்லத்துரை காணொலி எடுத்து அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், அதைத் தட்டி கேட்ட என்னை அவர் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், வனத் துறை ஊழியர் செல்லத்துரை, விவசாயி புதியசேகர் 'என்னைத் தாக்கினார்' எனக் கூறி சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விவசாயி கைது
இந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விவசாயி புதியசேகரை நேற்று (டிசம்பர் 29) காவல் துறையினர் கைதுசெய்து மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வனத் துறை ஊழியர் செல்லத்துரை மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு!