தென்காசி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக விழா நாட்களில் உற்சவர் வீதி உலா நடத்தாமல், கோயிலுக்குள்ளேயே தினமும் உற்சவர் புறப்பாடு நடத்தப்பட்டது.
தினமும் அபிஷேகமும், உச்சிகால பூஜையும், தீபாராதனைகள் நடைபெற்ற நிலையில் சுவாமி, அம்பாள் அனைத்து தினங்களிலும் பூங்கோயில் என அழைக்கப்படும் ஏகசிம்மாசன வாகனத்தில் அலங்காரங்கள் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் மட்டும் பிரகார வலம் வந்தது.
அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவ திருவிழா இன்று உலகம்மன் சன்னதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.