தென்காசி: கூலைக்கடை பஜாரில் உள்ள பெட்ரோல் பங்கில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு எத்தனால் கலந்து பெட்ரோல், டீசல் விற்பதால், தனது வாகனம் தொடர்ந்து பழுதாவதாக வாடிக்கையாளர் ஒருவர், எத்தனால் கலந்த பெட்ரோலுடன், பங்க் நிறுவன ஊழியரிடம் புகார் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தென்காசியில், கூலைக்கடை பஜார் பகுதி நான்கு சாலை பகுதியாக உள்ளதால், அதிகப்படியான பொதுமக்கள் இங்குள்ள பங்கில் பெட்ரோல் போடுவது வழக்கம். அந்த வகையில், வாடிக்கையாளர் ஒருவர் பெட்ரோல் போடச் சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு அந்த பங்க் பெட்ரோல் தரத்தின் மீது சந்தேகம் வந்துள்ளது. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோலை ஒரு கண்ணாடி குடுவையில் பிடித்து, அதனை பெட்ரோல் பங்க் ஊழியரிடம் காட்டி, இது கலப்படமான பெட்ரோல் என புகார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில், இங்கு விற்கப்படும் பெட்ரோல், டீசலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு எத்தனால் கலப்பதால், அவை ஆரஞ்சு ஜூஸ் நிறத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதற்கு பங்க் ஊழியர் எல்லாம் தற்போது எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு எத்தனால் கலப்பதால் பல வாகனங்கள் பழுதடைகிறது. அனைத்து வாகனங்களிலும் பம்ப் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது” என்று புகார் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது போன்று தவறான செயல்களில் ஈடுபடும் பங்க்குகளில், உரிய பரிசோதனைக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டவிரோத மணல் விற்பனை வழக்கு; தனியார் பங்குதாரர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!