இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறோம். சுகாதார களப்பணியாளர்கள் முழுவீச்சில் செயல்படுகின்றனர். தென்காசி மாவட்டத்தில் இதுவரை இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் இரண்டாயிரத்து 657 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்துள்ளது கண்டறியப்பட்டு 862 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர ஒன்பது பேரை அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தியுள்ளோம்.
ஆயிரத்து 715 பேருக்கு 28 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்துள்ளது. மாவட்டத்தில் ஒரு இடத்தில் கரோனா பரிசோதனை வசதி உள்ளது. இதுவரை 40 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேரும் சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
இன்னும் 12 பேரின் முடிவுகள் வர வேண்டியுள்ளது, 13 பேர் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.