நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து வணிக நிறுவன உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெல்லை மாநகரக் காவல் துணை ஆணையர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "நெல்லை அரசு மருத்துவமனையில் 38 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஒருவரைத் தவிர மற்றவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். அதிகம் பாதிப்பிற்கு உள்ளான மேலப்பாளையம் பகுதியில் 34 ஆயிரம் வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்று களக்காடு பகுதியில் 3 நபர்களுக்கும், பத்தமடையில் 1 நபருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் 12 ஆயிரம் வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு நபர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் அத்யாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனையில் தொற்று இல்லாமல் போனாலும் அவர்களும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். தேவையான வெண்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளது. 1,100 நபர்கள் சிகிச்சை பெறும் அளவில் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வந்துள்ள 4,500 குடும்பங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட நெல்லையைச் சேர்ந்த சிலர் இன்னும் ஊர் திரும்பவில்லை. அவர்களது தகவல்களை சுகாதாரத் துறையிடம் தெரிவித்துள்ளோம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் அங்கு சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'துப்புரவு பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள்'- அமைச்சர் கே.பி. அன்பழகன்