தென்காசி: தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (பிப். 19) அன்று முடிவடைந்த நிலையில், நாளை(பிப். 22) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் புளியங்குடி நகராட்சி, வாசுதேவநல்லூர், சிவகிரி, ராயகிரி ஆகிய 3 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் பணிக்காக கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் மீது புகார்
இந்நிலையில், நேற்று (பிப். 20) இரவு நேரத்தில் கல்லூரிக்குள் அடையாளம் தெரியாத கார்கள் வந்து சென்றதாகக் கூறி 100க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கல்லூரி முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கல்லூரி வளாகத்திற்குள் வந்த வாகனம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி 10ஆவது வார்டு திமுக வேட்பாளர் லைலா பானு என்பவருடையது என்றும், திமுகவினர் சிலர் வாக்கு எந்திரத்தை மாற்றவே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்ததாகவும் கூறி சுயேட்சை மற்றும் மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வாக்கும் எண்ணும் மையத்தின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நாளை வாக்கு எண்ணிக்கை: மதுரையில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்