தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் வாழைத்தார் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் வாழை விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாசரேத், வள்ளியூர், திசையன்விளை, சேர்மாதேவி, மதுரை மேலூர், அச்சம்புதூர் மற்றும் வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வாழைத்தார்களை இந்த சந்தைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக கட்டுப்பாடுகளுடன் வாழைத்தார் சந்தை இயங்கிவருகிறது. முகூர்த்த நாட்கள், கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் செவ்வாழை, வயல் வாழை, ரோபஸ்டா, கதலி வாழை, கற்பகவல்லி, கோழிக்கூடு மட்டி வாழை, சக்கை வாழை உள்ளிட்ட வாழைத்தார்கள் இந்த சந்தைக்கு விற்பனைக்கு அதிக அளவில் வந்துள்ளது.
தற்போது பண்டிகை நாட்கள் காரணமாக செவ்வாழை ஒரு தார் ஆயிரத்து 100 ரூபாய்க்கும், கற்பகவல்லி ஒரு தார் 600 ரூபாய்க்கும், கதலி வாழை ஒரு தார் 500 ரூபாய்க்கும், ரோபஸ்டா ஒரு தார் 300 ரூபாய்க்கும், கோழிக்கூடு ஒரு தார் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 100 வாழை இலை கொண்ட ஒரு கட்டு ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆவதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது ஓணம் பண்டிகை வருவதால் வாழைத்தார் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் இருந்த நிலையில் தற்போது வாழைத்தார்கள் விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.