தென்காசி: கருங்காலி மரத்தின் கட்டை அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்டது. இதன் வேர் பட்டை, மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கருங்காலி மரத்தை கொண்டு மாலைகள், கையில் அணியக்கூடிய வளையல்கள் ஆகியவை செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் மர வேலை செய்து வரும் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் புளியங்குடி, சிந்தாமணி, சொக்கம்பட்டி, சிங்கிலிபட்டி, ஆகியப் பகுதியில் ஏராளமான மர வேலை செய்பவர்கள் உள்ளனர். இதில் ஒரு பகுதியாக புளியங்குடி பகுதியில் மரத்தால் பல்வேறு விதமான பொருள்களை செய்து அசத்தி வருகின்றனர்.
புளியங்குடி பகுதியில் மாரிமுத்து என்பவர் கருங்காலி, நிலவேம்பு, மஞ்சள் கடம்பு, மற்றும் தோதகம் உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட மரத்தினை கொண்டு தனது பணிகளுக்கு இடையே கைவினைப்பொருட்கள் செய்து அசத்தி வருகின்றார்.
கடந்த 20 வருடங்களாக மர வேலைகளில் ஈடுபட்டு வரும் இவர் கரோனா ஊரடங்கு கால கட்டத்தில் கருங்காலி மரத்தின் நன்மைகளை அறிந்து அதனைக் கொண்டு கைவினைப்பொருட்கள் செய்ய ஆரம்பித்தார். இதில் குறிப்பாக கருங்காலி மரத்தை கொண்டு மோதிரங்கள், திருகுடன் கூடிய கம்மல்கள் ஆகியவற்றை செய்து சுற்றுவட்டார மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்துள்ளார்.
மேலும் மாரிமுத்து கூறுகையில், 'இந்த வகை மரத்தில் மருத்துவ குணம் அதிகம் நிறைந்திருப்பதால் இதனை மக்கள் தங்களது வாழ்வில் அன்றாடமாக பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் எந்த விதமான நோய்களும் வராது' என்கிறார். மக்களின் அன்றாட வாழ்வில் இந்த மருத்துவ குணங்கள் கொண்ட மரங்களை இணைக்கும் வகையில் தட்டு, கரண்டிகள், தோசை எண்ணை தேய்ப்பான் ஆகியவற்றையும், நிலவேம்பு மரத்தில் டம்ளர்களும் செய்துள்ளார். இந்த டம்ளர்கள் கரோனா போன்ற நோய்களையும் நீக்கும் வல்லமை கொண்டது எனவும் கூறுகிறார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இந்த கைவினைப் பொருட்களை செய்ததற்காக பல்வேறு விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இவ்வாறு மரத்தில் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், மனித வாழ்வின் மரங்களின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் கைவினைப் பொருட்கள் செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரடி அட்டகாசத்தால் வீட்டின் வளாகத்திற்குள் செல்ல முடியாமல் தவிக்கும் வயதான தம்பதி!