தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னக்காடு பீட் பகுதிக்குட்பட்ட மங்களாபுரம் பரம்பு பகுதியில், நாய்களை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஐந்து நபர்களை கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு 1.25 லட்சம் ரூபாய் வனத்துறை அபதாரம் விதித்துள்ளனர்.
வீட்டில் வளர்க்கப்படும் வேட்டை நாய்களை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு சில தினங்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில், ரேஞ்சர் சுரேஷ் தலைமையில், கடையநல்லூர் பிரிவு வானவர் முருகேசன், மேக்கரை பிரிவு வனவர், அம்பலவாணன், சிறப்பு பிரிவு வானவர் ரவீந்திரன் வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ராஜா, அய்யாதுரை, மகாதேவன், வேட்டை தடுப்பு காவலர்கள் சுப்புராஜ், கணேசன் ஆகியோர் காசிதர்மம் மற்றும் மங்களாபுரம் பறம்பு பகுதியில் மாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சின்னக்காடு பீட் எல்லைக்கு உட்பட்ட மங்களாபுரம் பறம்பு பகுதியில் காசிதர்மத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் லட்சுமண குமார் (31), சுப்பையா மகன் பழனிச்சாமி (40), அர்ச்சுனன் மகன் மாடசாமி (62), மூக்கன் மகன் செல்லத்துரை (55), வைரவன் மகன் திருமலை குமார் (42) ஆகியோர் வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்ததைக் கண்டுள்ளனர். இதனையடுத்து வனத்துறையினரைக் கண்டதும் தப்பிக்க முயன்ற அந்நபர்கள் அனைவரையும் மடக்கி பிடித்து, அதிரடியாக வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட அனைவரின் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 (9)ன் கீழ் வழக்குப் பதிந்து புலன் விசாரணை செய்ததில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வன உயிரினங்களை வேட்டையாட முயன்றனர் என்ற குற்றத்திற்காக மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகனின் உத்தரவின்படி ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபாய் வீதம் மொத்தம் 1,25,000 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டு அனைவரையும் வன ரேஞ்சர் சுரேஷ் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இப்பகுதியில் வன உயிர்கள் வேட்டையாடப்படுகின்றதா? என வனத்துறையினர் என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ரேஞ்சர் சுரேஷ் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: செங்கல் சூளைகளுக்கு மண் கடத்தல் வழக்கு: திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் ஆணை!