தென்காசி: சங்கரன்கோவில் பகுதி திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாக்குளத்தில் காந்தாரியம்மன் கோயில் கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று (ஜன. 25) சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.
இதனையடுத்து, சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) நல்லசிவம், காவல் ஆய்வாளர்கள் மரிய ஜேசுதாஸ், மீனாட்சி நாதன், உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் தனியார் மண்டபத்தின் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.
அனுமதி மறுப்பு
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மள்ளர் மீட்புக் களம் இயக்கத்தின் நிறுவனர் செந்தில், முன்னாள் நீதிபதி பெ. ராமராஜ், தமிழினப் பாதுகாப்புக் கழகம் தலைவர் சிவகுரு, நாம் தமிழர் கட்சி மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கவேலு உள்ளிட்டப் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்தனர்.
கரோனா பரவல் காரணமாக காவல் துறையினர் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். இதனால், கோயில் கட்டுவதற்கு போராடும் குழுவினருக்கும், காவல் துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கரோனா காலகட்டத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்த முயன்றதாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் 21 பேரைக் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்