சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேயன்பட்டியைச் சேர்ந்த விவசாயியான விடுதலை அரசு, தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் குளிர்பிரதேசங்களில் விளையும் திராட்சை தோட்டம் அமைத்து, நம்மாழ்வாரின் கொள்கையின் படி இயற்கை விவசாயமுறையைப் பின்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இவரது தோட்ட திராட்சைகளுக்கென தனி கிராக்கி உள்ளது. நாள்தோறும் 300 முதல் 500 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், தற்போது விடுதலை அரசின் தோட்டத்தில் விளைந்துள்ள திராட்சை கொடிகளின் மீதும், திராட்சை பழங்களின் மீதும் மாவு பூச்சி தாக்குதல் அதிகமடைந்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் முயற்சிகளும் கை கொடுக்கவில்லை.
இது குறித்து விடுதலை அரசு கூறுகையில், “சிவகங்கை மாவட்டம் வானம் பார்த்த செம்மண் பூமி. கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையின்றி பலரும் விவாசயம் செய்வதை கைவிட்டு கூலித்தொழிலாளியாக சென்றுவிட்டனர். இங்கு தோட்டம் அமைப்பதற்கு முன்பு சீமைக் கருவேல மரங்கள் இருந்தது. பல போராட்டங்களுக்குப் பின்பு திராட்சைத் தோட்டம் அமைத்து வெற்றி பெற முடிந்தது. தற்போது மாவு பூச்சியின் தாக்குதலால் பெரும் நஷ்டமடைந்துள்ளேன். தமிழ்நாடு அரசு அல்லது தோட்டக்கலையினர் மானியம் அளித்து உதவினால் மாவு பூச்சியின் பிடியிலிருந்து திராட்சைத் தோட்டத்தை மீட்டெடுக்க முடியும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.