சிவகங்கை: கீழப்பூங்குடி அடுத்துள்ளது கள்ளராதினிப்பட்டி. இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 63 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று(ஏப். 07) பள்ளிக்கு 62 மாணவ, மாணவிகள் வருகைபுரிந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் வழக்கம்போல் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 15 மாணவிகள், 6 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 21 பேரையும், அருகிலுள்ள கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆசிரியர்கள் சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், மருத்துவமனைக்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதை கேள்விப்பட்ட பெற்றோர்கள் அங்கு குவிந்தனர்.
இதனிடையே அங்கு சமையல் அமைப்பாளர், பெற்றோர்களிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்குவந்த மதகுபட்டி காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்ததுடன், சம்பவ இடத்திற்கு ஆர்டிஓ தாசில்தார் உள்ளிட்டோர் வருகைதந்து குழந்தைகளின் உடல்நிலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உடனடியாக மருத்துவமனைக்கு வந்து பெற்றோர்களை சமாதானம் செய்ததுடன் பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவியரிடம் விசாரணை மேற்கொண்டதுடன் பள்ளிக்குச்சென்றும் விசாரணை மேற்கொண்டு, அங்கிருந்த சமையலறையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கிராமத்தினரிடம், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியும் அளித்தார். மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டம்: தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!'