சிவகங்கை அருகே கண்மாய்க்குள் பதுக்கிய சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை சிவகங்கை வனத்துறையினர் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்ததுடன் கடத்திய 3 பேரைக் கைது செய்தனர்.
பெங்களூருவில் இருந்து யானை தந்தங்களைக்கடத்தி வருவதாக சிவகங்கை வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று (அக்.4) சந்தேகத்தின் பேரில் மானாமதுரை அருகே கீழப்பசலை பாலு என்பவரின் மகன் சங்கர்(38) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பூர் எம்.ஜி.ஆர்., காலனி முருகன் மகன் ஜெயக்குமார்(30), விருதுநகர் வடமலைகுறிச்சி கருப்பணசாமி மகன் கணேஷ்பாண்டியன்(42), ராமநாதபுரம் பிரபாகரன்(35) மற்றும் கார் டிரைவர் விருதுநகர் நந்திரெட்டிபட்டி கணேஷ்பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து பெங்களூரு ராஜாஜி நகரில் இருந்து யானை தந்தங்களைப் பெற்று வந்துள்ளதாகவும், விற்பனை செய்வதற்காக காளையார்கோவில் அருகே மணியங்குடி கண்மாயில் புதைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பின் அங்கு சென்ற வனத்துறையினர், கண்மாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 9.46 கிலோ யானை தந்தங்களை கைப்பற்றியதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து சங்கர், ஜெயக்குமார், வடமலைகுறிச்சி கணேஷ்பாண்டியன் ஆகிய மூவரையும் கைது செய்து, சிவகங்கை நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழப்பு