கூட்டுறவு மொத்த பண்டகசாலை விற்பனை சங்கத்தின் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த நாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவரது பதவியேற்பு விழா சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியில் உள்ள பாம்கோ அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காதி, கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் பாஸ்கரன், ”விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்கு முன்பு, உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும். கிராமங்களில் பெரும் பிரச்னைகளாக தற்சமயம் இருப்பது குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, பேருந்து வசதி ஆகியவையே ஆகும். அதனை நம்முடைய கட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ஊராட்சிமன்ற தலைவர்கள் ஊராட்சி பிரதிநிதிகள் சரி செய்ய முன்வரவேண்டும்” என்றார்.
மேலும், இந்த விழாவினைத் தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகிய சுமார் 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் விழாவானது சிவகங்கை பேருந்துநிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு நடைபெற்றது. அதன்பின் எம்.ஜி.ஆர் சிலைக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.