சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பல் ஒன்று செல்வியின் வீட்டுக்குள் புகுந்து அவரது தாயாரை தாக்கிவிட்டு, செல்வியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர்.
இதனையடுத்து செல்வியின் தாயார் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிவகங்கையைச் சேர்ந்த சகோதரர்களான பாண்டி, செல்வம், அவருடைய நண்பர்கள் பிரபாகரன், சுலைமான், சிரஞ்சீவி ஆகிய ஐந்து பேரை சிவகங்கை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்துவந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கானது மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக்கேயன், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளான சகோதரர்களுக்கு சாகும் வரை வாழ்நாள் ஆயுள் தண்டணை விதித்தும், மூன்றாம் மற்றும் நான்காம் குற்றவாளிகளுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஐந்தாவது குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
.