சிவகங்கை: காலம் செல்லும் வேகத்தில் மனிதர்களே மனிதர்களுக்கு தீங்கு செய்யும் சூழலுக்கு மத்தியில், ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி தனக்கு உணவளித்து உதவியவரையே தனது எஜமான் என்று எண்ணிக்கொண்டு என்றுமே மாறாத பாசத்துடன் இருக்கும் ஓர் உயிரினம் உண்டு என்றால், அவை நாய்கள் தான். மற்றைய விலங்கினங்களிலும் சற்று மேன்மையானவை.
தனது எஜமானுக்காக, சமயத்தில் அந்த ஜீவன் சில நேரங்களில் எதையும் செய்யத்துணியும்; அதன் விளைவாக தனக்கு ஏற்படும் பாதகங்கள் சாதகங்கள் பற்றி ஒருபோதும், சிந்திக்காது செயல்படும். அவ்வப்போது, துணிச்சலுடன் தன்னேயே பணயம் வைத்து செயற்கரிய செயல்களில் ஈடுபட்டு, அத்தகைய ஜீவன்கள் தங்களின் இன்னுயிர்களையும் தியாகம் செய்த சம்பவமும் நடந்தது உண்டு. இவற்றிற்குப் பின், நாமும் அவைகளை மறந்துவிட்டு, நமது அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுவோம்.
நன்றியுள்ள ஜீவனுக்கு சிலை வைத்த பெரியவர்: தமிழ்நாட்டில் இதற்கு மாறாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. தனக்கும் தன் குடும்பத்திற்கும் விசுவாசமாகவும், வீட்டில் ஒருவருமாகவும் இருந்த செல்லப்பிராணியை அதன் மறைவுக்குப் பிறகும் அதை நினைவில் வைத்துப் போற்றும் வகையில் ஒருவர் செய்த காரியம் நம்மை எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்து வியப்படையச் செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இறந்த நாய்க்கு சிலை வைத்து வழிபாடு செய்து வரும் 82 வயது முதியவர் அனைவரையும் நெகிழ்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நாய்க்கு சிலை வைத்து வழிபாடு: மானாமதுரையைச் சேர்ந்தவர் முத்து. இவர் 'டாம்' என்கிற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இது கடந்த 2021ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளது. இதனால் வேதனையில் இருந்த முதியவர், டாமின் நினைவாக மானாமதுரையில் 'டாம்' நாய் போன்ற ஒரு சிலையை நிறுவியுள்ளார்.
நாய் வளர்ப்புப்பிரியர்கள்: அதனை ஒரு வீட்டில் இருந்து மறைந்த ஒருவராகக் கருதி மாலை, ஆடை அணிவித்து வழிபாடு செய்து வருவது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து டாமுக்கு சிலைவைத்த பெரியவர் முத்து கூறுகையில், 'என் பசங்களைவிட என் நாய் மீது அதிக பாசம் வைத்திருந்தேன். 2010ஆம் ஆண்டு முதல் என்னுடன் இருந்தது. 2021ஆம் ஆண்டு இறந்துவிட்டது. என் தாத்தா, பாட்டி, தந்தை என அனைவரும் நாய்ப்பிரியர்கள்' என்று கூறினார்.
மேலும், முத்துவின் மகன் மனோஜ் குமார் கூறியதாவது, 'இறந்த டாம் நாய்க்கு ரூ.80 ஆயிரம் செலவில் இந்த பளிங்கு சிலை செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாய்க்கு கோயில் கட்டத்திட்டமிட்டுள்ளோம். புனித நாட்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னதானம் செய்து சிலைக்கு மாலை அணிவிப்போம்' என்று கூறினார்.
நன்றியுள்ள உயிரினத்திற்கு சிலை நிறுவி நன்றி நவிழ்ந்த பெரியவரின் செயல் காண்போரை கலங்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: Video: சிவகங்கை மாவட்டத்தில் யுகாதி பண்டிகை - தெலுங்கு மக்கள் பால்குடம் எடுத்து வழிபாடு