சிவகங்கை : காரைக்குடி அடுத்த பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்தி பெருவிழா ஆண்டுதோறும் பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி அன்று விசேஷ பூஜைகள், தீர்த்தவாரி, கொலுக்கட்டை படையல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.
இதனைக் காண தமிழ்நாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
கரோனா - கட்டுப்பாடு
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மதம் சார்ந்த விழாக்களுக்கு தமிழ்நாடு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு உத்தரவால் பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் இன்றி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெற்றது.
பக்தர்கள் தரிசனம்
கற்பக விநாயகர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் கோயில் குருக்கள், பண்டிதர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் கோயில் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் அங்குச தேவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று குளத்தில் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலின் வாயிலில் நின்று பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க :உச்சி பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்!