சிவகங்கை: மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் செவ்வாய் சாட்டுதல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்தத் திருவிழா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கரோனா கட்டுப்பாடு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழா கொண்டாடப்படவில்லை. இந்தாண்டு திருவிழா கொண்டாட அனுமதி கிடைத்த நிலையில் மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர்.
அசைவ உணவுகள் படைப்பு
அதனைத்தொடர்ந்து நேற்று (அக்.05) மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் அம்மனை வேண்டி அம்மனுக்குப் பிடித்த உணவுகளை ஊர் மக்கள் எடுத்துச்சென்றனர்.
புதிய மண் சட்டிகளில் பணியாரம், கொழுக்கட்டையுடன் கறிச்சோறு, நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுக்கறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து, மண்சட்டியில் தீப்பந்த விளக்கு ஏற்றி, கொட்டும் மழையில் விளக்கு அணையாமல் இருக்க குடை பிடித்துக்கொண்டு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
பின்னர், எல்லைத் தெய்வமான எல்லைப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் காட்டப்பட்டது. இந்த விழாவில் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி அம்மனை வழிபட்டனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயிலில் அக்.7 முதல் அக்.15 வரை நவராத்திரி திருவிழா