சிவகங்கை: சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் காவல் நிலையம் எதிரே காவிரி கூட்டு குடிநீர் பிரதான இரும்பு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இரும்பு குழாய்களை இணைக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ராட்சத இரும்புக் குழாய்களை பதித்து வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது வடமாநிலத் தொழிலாளரான மேற்கு வங்க மாநிலம், ஹக்ஹாலி முர்ஷிதாபாத் நகரைச்சேர்ந்த சுபால் ஹால்டர் மகன் தேவப்பிரதா ஹால்டர் (வயது 31) தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குழாய் உள்ளே இருந்து வெல்டிங் வேலை செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த இளைஞருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரும்புக் குழாய்க்குள் 12 அடி தூரத்தில் இருந்து வெளியே வர முயன்றதாகவும், ஆனால் குழாய்க்குள்ளேயே மூச்சுத் திணறி மயங்கி விழுந்த நிலையில் அவர் மூச்சுத்திணறி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு பிணக்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தொழிலாளர் இறந்தது சம்பந்தமாக பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இறந்த வடமாநிலத் தொழிலாளிக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிப்பதில் தாமதம்... ஆளுநர் தான் காரணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்