சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் இன்று நேரில் ஆய்வு மேற்கொன்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கீழடியைப் பொறுத்தவரை 1961ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவற்றில் 30 இடங்களில் ஒருமுறையும் 10 இடங்களில் இரண்டுக்கு மேற்பட்ட முறையும் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன.
கீழடியைப் பொருத்தவரை இது ஒரு சங்ககால தொழில் நகர நாகரிகம். பொதுவாக இங்கு இரண்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிடைத்த தொழில் பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பிதான் ஆய்வு செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. இந்தியாவிலேயே அதனை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.
உலக வரலாற்றில் கீழடி அகழ்வாராய்ச்சி மிக முக்கியமானது, தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளை ஒருங்கிணைத்து ஒரே அறிக்கையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே சிலிக்கா என்கிற உயர்தர மணல் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இருந்துள்ளது. கட்டுமானத்தில் அலுமினியம் பயன்படுத்தி உள்ளனர், கீழடியில் உள்ள கீறல்களுக்கும் சிந்துவெளி நாகரிகத்துக்கும் ஒற்றுமை உள்ளது.
வெகு விரைவில் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்படும். மத்திய அரசு தமிழர்களின் நாகரிகத்தை நசுக்கவில்லை. கீழடியை தமிழ் நாகரிகம் என்று தனித்துப் பார்ப்பது தவறு, இந்திய நாகரிகத்தின் அடிக்கட்டுமானம்தான் கீழடி” எனக் கூறினார்.