சிவகங்கை: காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை நகரில் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியிலும், அதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ள வார்டு பகுதியில் எம்பி நிதியின் கீழ் செயல்படுத்தியுள்ள மக்கள் நலத் திட்டத் தொடக்க நிகழ்ச்சியிலும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்பி, “ராகுல் காந்தி யாத்திரையின் மூலம் மக்களின் கவனம் காங்கிரஸ் கட்சியை நோக்கி திரும்பி இருக்கிறது. வரக்கூடிய கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அங்கு காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.
ரபேல் வாட்ச் பிரச்னை என்பது சர்ச்சையே இல்லை. நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது, இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது, வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது என பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், இது ஒரு சர்ச்சையே இல்லை. நாட்டின் பிரச்சினைகள் குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும். இந்த வாட்ச் கட்டியிருப்பது என்பது சர்ச்சையே இல்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் தொகுப்பில் கரும்பையும் வழங்க பரீசிலனை செய்ய வேண்டும். கமல்ஹாசன் எங்கள் கூட்டணியில் இனைந்து, வரும் தேர்தலில் போட்டியிடப் பிரகாசமான வாய்ப்புள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பணம் ஒதுக்கியதாக அறிவிக்கிறார்கள். ஆனால் அங்கு எதுவும் நடைபெறவில்லை.
இருப்பினும் முதல் பேட்ச் படிப்பை முடித்து மருத்துவர்களாக மாணவர்கள் வெளியேற உள்ளனர். உடனடியாக கட்டுமான பணியை முடித்து திறக்க, நான் கடிதம் எழுதியுள்ளேன். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவு. கரோனா பரவல் என்பதை அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும். ஆனால் பாரத் ஜோடோ யாத்திரை டெல்லியை அடையவிருந்தபோது பரவுகிறது என்கிற மத்திய அரசின் அறிவிப்பில் உள்நோக்கம் உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜே.பி. நட்டா