சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் வெகு விமரிசையாக விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
இவ்வாலயத்தில் ஆடி வெள்ளி அன்று பச்சை மஞ்சள் அரைத்து அம்மனை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளியன்று ஆண்டுதோறும் மழைப் பொழியவும், விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் கோமாதா பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
தொடர்ந்து, 13ஆம் ஆண்டாக இவ்விழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று 108 கோமாதாக்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வழிபாட்டில் ஈடுபட்ட மாடுகளுக்கு வேட்டி, துண்டு, மஞ்சள், குங்குமமிட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோமாதா, முத்துமாரியம்மனை வழிபட்டுச் சென்றனர்.