சிவகங்கை: தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கல்வி நிலையங்களில் மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளாவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இந்நிலையில், சென்னை, கோவை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் நவ.11ஆம் தேதி கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறி தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து கரூரில் மற்றொரு பள்ளி மாணவி (நவ.19) பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. பல்வேறு அமைப்புகளும், தலைவர்களும் உயிரிழந்த மாணவிகளுக்கு நீதிக் கேட்டும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகம் அருகே உயிரிழந்த மாணவிகளுக்கு நீதி வேண்டும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (நவ.22) போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: Need New Act: 'கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும்' - இந்திய மாணவர் சங்கம்