நாடு சுதந்திரம் அடைந்து 72ஆவது ஆண்டு நிறைவடைந்திருப்பதை கொண்டாடிவரும் இந்தத் தருணத்தில், தேவகோட்டையை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவரான சூறாவளி என்ற லெட்சுமணன் அவரின் சுதந்திரப் போராட்ட நினைவுகளை இங்கே பெருமையுடனும் வருத்தத்துடனும் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், 1927ஆம் ஆண்டு பொன்னையா-பெரியநாயகி அம்மாள் தம்பதிகளுக்கு மூத்த மகனாக பிறந்தார் லெட்சுமணன். தனது 15ஆவது வயது முதல் தமிழ் புத்தகங்கள், கட்டுரைகளை ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினார். அப்பொழுது வெளிவந்த சுதேசமித்திரன் வாயிலாக போராட்ட குணம் தொற்றிக் கொண்டது லெட்சுமணனுக்கு. அதில் இருந்து ஆங்காங்கே போராட்டங்களில் பங்கெடுக்கத் தொடங்கினார். 1942ஆம் ஆண்டு தனது 15ஆவது வயதில் பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில், தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே, வெள்ளையர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருப்பதை கண்டு அதில் பங்கெடுத்தார்.
அப்பொழுது அங்கு வந்த ஆங்கிலேய அலுவலர்கள், கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் 27 பேர் கொல்லப்பட்டனர். அந்த துப்பாக்கி சூட்டில் குண்டடிபட்டு காயமடைந்து உயிர் தப்பியதை நினைவுகூர்கிறார். இப்படி பல இன்னுயிர்களை இழந்து, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் வாடி பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தின் பெருமை இன்று சிதறடிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க கூறுகிறார்.
சுதந்திர தாகத்துடன் திரிந்த தனக்கு வீட்டில் கிடைத்த பரிசு தண்டச்சோறு, வெட்டிப்பய போன்ற கடுமையான வார்த்தைகள்தான் என்றும், ஆனால் சுதந்திர வேட்கைக்கு முன் அந்த கடுஞ்சொற்களால் தன் மனதை சிறிதும் அசைக்க முடியவில்லை என்றும் புன்னகை பூத்த முகத்துடன் பேசினார். ஆனால் எந்த கனவுடன் சுதந்திரம் பெற வெள்ளையர்களை எதிர்கொண்டோமோ, சுதந்திரத்திற்கு பின் அந்தக் கனவு சுக்குநூறாகி போனதாக கவலை கொள்கிறார் லெட்சுமணன்.
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக எந்த தலைவர்களும் செயல்படவில்லை என்று குற்றம் சுமத்தும் இவர், போராடிப் பெற்ற சுதந்திரத்தால், நம் நாட்டில் அனைவருக்கும் பள்ளியில் இருந்து மேல் படிப்பு வரை இலவச கல்வி, இலவச மருத்துவம் ,மொழி வளர்ச்சி, இளைஞர்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு அமையும் என்று ஆசையில் மிதந்த தனக்கு, எல்லாம் வெறும் கனவாகியது தாங்க முடியாத இழப்பாக உள்ளது என்று கவலைகொள்கிறார்.
போராட்டத்திற்கு பின் கிடைத்த சுதந்திரம் தனக்கு ஒரு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளித்ததாக மகிழ்ச்சி தெரிவிக்கும் லெட்சுமணன், அந்த மகிழ்ச்சி சிறிது காலம் கூட நிலைக்கவில்லை என்றும், சுதந்திரம் அடைந்த பிறகு எந்த தலைவர்களும் தங்களைப் போன்ற கீழ் மட்ட தொண்டர்களை மதிக்கவில்லை என்றும், இதனால் தொண்டர்களுக்கு வறுமையே வாழ்க்கையாகிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.
தான் நினைத்த சுதந்திரம் இதுவல்ல என்று கூறும் லட்சுமணன், தொண்டர்களை மதிக்காமல், கடமைக்காக தியாகத்திற்கு விலை வைத்து அவர்கள் கொடுக்கும் பென்ஷனை நாம் ஏன் பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு பென்ஷனையே வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். தற்போது பத்திரிக்கையாளனுக்குரிய பென்ஷன்தான் தனது வாழ்வாதாரம் எனக் கூறும் லெட்சுமணன், நாட்டின் ஜீவாதாரமான நதி நீர் இணைப்பு ஒன்றுதான் தனது வாழ்நாள் கனவு என்றும் தனது ஆசையை வெளிப்படுத்துகிறார்.