மார்ச் 3ஆம் தேதியன்று தனியார் வார இதழ் ஒன்றில் பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் இடையிலான உள்கட்சி பூசல் விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்றிரவு சிவகாசியில் அடையாளம் தெரியாத நபர்களால் செய்தியாளர் கார்த்திக் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி உள்ளார். படுகாயமடைந்த அவர், சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட திமுக சார்பாக சிவகாசி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டனக் கூட்டத்தில் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுகவினர், பல்வேறு பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத் துறையினரோடு கலந்து கொண்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக, இந்த சம்பவத்தைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதேபோல் பல்வேறு அமைப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!