தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் மிகப்பெரிய நகராட்சியாக இருந்துவருகிறது. 30 வார்டுகள் கொண்ட நகரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். விசைத்தறி இங்கு பிரதான தொழிலாக உள்ளது.
அதேபோன்று பூச்சந்தை, எலுமிச்சை சந்தை, வத்தல் என முக்கிய வியாபார நகரமாக சங்கரன்கோவில் உள்ளது. இச்சூழலில் சங்கரன்கோவில் நகராட்சிக்கு ஒரு வருடத்திற்கு மேலாக ஆணையர் இல்லாத நிலையில், ஆணையரை நியமிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் திமுக முன்னாள் அமைச்சர் தங்கவேலு மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “சங்கரன்கோவில் நகராட்சியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஆணையர் இல்லாமல் கடிவாளம் இல்லாத குதிரையாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டுவருகிறது.
மேலும் இங்கு குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், நகராட்சி பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைக்கிடங்கு கட்ட முயற்சி, நகரில் கடும் குடிநீர் பஞ்சம் போன்றவை உள்ளன. மேலும் ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.