சிவகங்கை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற போட்டிகளை சிவகங்கையில் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவேண்டும் என சேவல் வளர்ப்பு ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கி.பி 5 ஆம் நூற்றாண்டிலேயே சேவல் சண்டை நடைபெற்றதற்கான நடுகல் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்தச் சேவல் சண்டையில் பல்வேறு வகைகள் உள்ளன. குறிப்பாக சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால், கட்டுசேவல் சண்டை என ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வகையில் நடைபெற்று வந்தன. அப்பேற்பட்ட சேவல் சண்டை ஒரு சிலரின் தவறான செயல்பாட்டால் தடைசெய்யப்பட்டது.
இந்நிலையில், தேனி மாவட்ட உத்தமபாளையத்தில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பின்னர் ஜனவரி 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு போல சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்கி பாரம்பரியத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட சேவல் வளர்ப்பு ஆர்வளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.