சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் சாலையில் செல்லும் பெண்கள், கடைகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வரும் ஒரு கும்பல் கத்தியைக்காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் ரோகித் நாதன் உத்தரவின் பேரில் சிவகங்கை நகர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இதனையடுத்து, சிவகங்கை அருகேயுள்ள மேலவெள்ளஞ்சி பகுதியில் குற்றவாளிகள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகேயுள்ள ஆதியக்குடியைச் சேர்ந்த ஐய்யப்பன், சிவகங்கையைச் சேர்ந்த நூர் முகமது, மதுரை கே.புதுாரைச் சேர்ந்த பாலா, பொள்ளாச்சி கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சூரியா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்களை கைது செய்தது மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து 44.5 பவுன் நகைகள், நகை பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.