குறிப்பிட்ட சமூக பெண்கள் குறித்து தவறாக வாட்ஸ் அப்பில் வெளியான விவகாரம் தொடர்பாக பொன்னமராவதியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெண்கள் குறித்து தவறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டவரை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் சிங்கம்புணரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் கைகளில் துடைப்பத்துடன் கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் சிங்கம்புணரி காவல்நிலையம் அருகே சென்றபோது, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் இப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.