சிவகங்கை: சிவகங்கையில் 2007ஆம் ஆண்டு நகராட்சித் தலைவராக இருந்தவர், முருகன். இவர் நகராட்சி அலுவலகத்திலிருந்து தனது காரில் வீட்டிற்குச் சென்றபோது, சாலையில் குண்டு வெடித்ததில் உயிரிழந்தார். அவரது ஓட்டுநர் பாண்டிக்கு இரண்டு கால்களும் துண்டாகின.
குண்டு வைத்து கொலை
இச்சம்பவம் தொடர்பாக திமுக மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து, மந்தக்காளை, பாலா, சரவணன், மாமுண்டி (எ) செந்தில், கே.கண்ணன், வீரபாண்டி, பி.கண்ணன், முருகப்பாண்டி, கம்பம் மனோகரன், சென்னை வீரமணி ஆகிய 11 பேர் மீது அப்போதைய டவுன் காவல் ஆய்வாளர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்தார். இவ்வழக்கில் 139 பேர் சாட்சிகளாக இருந்தனர்.
கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான பாலா, முருகப்பாண்டி ஆகியோர் உயிரிழந்தனர். வீரபாண்டி என்பவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
திமுக நிர்வாகி விடுதலை
இந்நிலையில் இந்த வழக்கு மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்ற நீதிபதி சுமதி சாய் பிரியா முன்பு இன்று (பிப்.23) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, அரசு தரப்பில் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாததால் திமுக மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து உள்பட 8 பேரை குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: வேண்டுமென்றே பொய் வழக்கு: ஜெயக்குமாரின் மகன் குற்றச்சாட்டு