சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பிரபல தொழில் அதிபராக இருந்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவரது ஒரே மகன் சதீஷ் பிரபு (28) சென்னையில் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூரில் நடந்த கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக திருப்பத்தூர் வந்தார்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சதீஷ் பிரபு திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி வழியாக தேவகோட்டை செல்லும்போது, காரைக்குடி அருகே தேனாற்றுப் பாலம் என்ற இடத்தில் கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சதீஷ் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த காவல்துறையினர் சதீஷ் பிரபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சதீஷ் பிரபு தொழிலதிபர் பாலசுப்பிரமணியனின் ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது.