சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். ராணுவ வீரரான இவர், வைகை பட்டாள ராணுவ வீரர்கள் என்ற அமைப்பின் சார்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து ஊர்களுக்கும் பின்னோக்கியே பயணம் மேற்கொண்டு, கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதனை, ஜூன் 26ஆம் தேதி சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் தொடங்கிவைத்தார். தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்றும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து பாலமுருகன் கூறுகையில், "அசாம் மாநிலத்தில் தற்போது ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறேன். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளேன். கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நோக்கிலும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் பின்னோக்கி பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
இன்று நான்காவது நாளாக எனது பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதனோடு, 15 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து உலக சாதனைக்கு முயற்சி மேற்கொண்டும் வருகிறேன். பெரிய நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்தால் நிச்சயம் சாதிப்பேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் அறிக்கை ஆக்கப்பூர்வமாக இல்லை அக்கப்போராக உள்ளது' - ராஜேந்திர பாலாஜி