சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருந்து பசும்பொன் தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் கார்களில் இன்று (அக்-30) காலை வந்து கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக, காரில் வந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உயிர்தப்பினர். உடன் வந்த அதிமுக நிர்வாகிகள் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
115ஆவது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி, பசும்பொன்னில் நடக்கும் திருவிழாவிற்கு, திருவாரூரில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுமான காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது மானாமதுரை-சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ள வைகை ஆற்றுப்பாலத்திற்கு அருகே முன்னாள் அமைச்சர்களின் வாகனம் முன்னும் பின்னுமாக நெரிசலில் சென்றது. அந்த நேரத்தில் வாகனங்கள் கட்டுப்பாடு இன்றி, ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டன.
இதில் முன்னாள் அமைச்சர் வாகனம் உட்பட 10 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர். உடன் வந்த அதிமுக நிர்வாகிகள் மணிகண்டன், ஜோதிபாசு, கல்யாணசுந்தரம், மதியழகன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மாநில காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா..? - ஜெயக்குமார் கேள்வி