சிவகங்கை: திருப்பாச்சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் சேதுராமன். இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் சிவகங்கையில் நடைபெற்று வரும் கட்டிடப்பணிக்காக தினமும் தனது இரு சக்கர வாகனத்தில் சேதுராமன் சிவகங்கை சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கட்டிடப்பணிக்காக சென்றவர் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக சொந்த ஊர் திரும்பும்போது பனையூர் அருகே சாலையின் குறுக்கே பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இரவு நேரம் என்பதால் இவர் விழுந்தது சாலையில் செல்பவர்களுக்கு தெரியாமல் போன நிலையில் அதிகாலையில் பாலப்பணிக்காக வந்தவர்கள் சிவகங்கை தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினரை அழைத்து உள்ளே விழுந்து கிடந்த சேதுராமன் மற்றும் அவரது பைக்கை வெளியே எடுத்து மீட்டுள்ளனர்.
சேதுராமன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பாலப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முறையாக அறிவிப்பு பலகையோ, அல்லது இரவில் ஒளிரும் அபாய எச்சரிக்கை பலகையோ பயன்படுத்தப்படாததால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவது சகஜமாகியுள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறை முறையாக அறிவிப்பு பலகைகள் வைத்து பணிகளை தொடர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலத்திற்குள் பைக்குடன் பாய்ந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:முன்னாள் வன்னியர் சங்க பிரமுகர் கொலையில் சிறுவன் உட்பட 13 பேர் கைது