சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும் 700 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், இன்று இரவு ஏழு மணிக்கு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, மூன்று மணிநேரம் ஆகியும் மின்சாரம் வராததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
இதுதவிர, அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு செல்போன் வெளிச்சத்தைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டது. மேலும், விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தவரை இங்கே மின்சாரம் இல்லாததால் மதுரைக்குக் கொண்டுசெல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான வேலையும் தெரியவில்லை என்றும், நிரந்தர பணியாளர்களை நியமிக்கப்படவேண்டும் என்றும் நோயாளிகள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்டதைப் போன்று உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நோயாளிகள் வேதனை தெரிவித்தனர்.