சேலம் மாவட்டம் இரும்பாலை அடுத்த நல்லண்ணம்பட்டி காட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் ( 24). முதுகலை பட்டதாரியான இவர், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற இளம்பிள்ளையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்த நிலையில், பூபாலன் கடந்த 7ஆம் தேதி, வெளியே சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிவந்தனர்.
பின்னர், பூபாலன் காணாமல் போனது தொடர்பாக, அவரது தந்தை மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த காவல் துறையினர், நேற்று (ஆகஸ்ட் 8) நள்ளிரவு சேலம் அடுத்த சித்தர் கோயில் அருகில் சாலையோரம் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றிருப்பதைக் கண்டு சோதனையிட்டனர்.
அப்போது, காருக்குள் இளைஞர் பூபாலன் வாய் மற்றும் முகம் முழுவதும் டேப்பினால் சுற்றப்பட்டு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பூபாலனை கழுத்து நெரித்து கொன்று, பின்னர் சடலத்தை காரில் வைத்துவிட்டு கொலையாளிகள் தப்பி சென்றிருப்பது தெரிய வந்தது. பின்னர் இவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகர் மூன்று பேர் கொண்ட தனிப்படை அமைத்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் பூபாலன் நிலப் பிரச்னை தொடர்பாக கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மகுடஞ்சாவடி காவலர்கள் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.