சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி சுசீலா(70). கடந்த இரண்டு நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். உடல் நலக்குறைவு மேலும் மோசமானதை அடுத்து, அவரை மருத்துவமனைக்கு மகன் பாலமுரளி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது பாதி வழியில் மூதாட்டி மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சாலையில் மயங்கி கீழே விழுந்தார். அப்போது செய்வதறியாது திகைத்து போய் இருந்த மகன் பாலமுரளி, சாலையில் நின்று கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோரிடம் உதவி கேட்டுள்ளார்.
ஆனால், அனைவரும் மூதாட்டிக்குக் கரோனா பாதிப்பு இருக்குமோ என்ற எண்ணத்தில் உதவ மறுத்து விட்டனர். அங்கிருந்த சிலர் அவசர ஊர்திக்குத் தகவல் தெரிவித்தனர். அரை மணி நேரத்திற்கு மேலாகியும், அவசர ஊர்தி வரவில்லை.
அப்போது அந்த வழியே சென்ற சேலம் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராணி (21) என்ற இளம்பெண் சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டியை கண்டவுடன் உடனே இறங்கி வந்து, முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்ப முயன்றார். இருப்பினும், அப்போது சுயநினைவு இல்லாமல் கிடந்தார்.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்த இளையராணி பொது மக்கள் உதவியுடன் மூதாட்டியை தூக்கிய அவர், பாலமுரளியை வண்டியை ஓட்ட சொல்லி பின்னால் அமர்ந்து மூதாட்டியை பிடித்துக் கொண்டார்.
ஆனால், மூதாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பலர் வேடிக்கை பார்த்த நிலையில் கரோனா அச்சத்தையும் தூக்கி எறிந்து விட்டு, மனித நேயத்துடன் உதவிய இளம்பெண்ணை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: குறைந்த செலவில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை உருவாக்கி சேலம் இளைஞர் சாதனை