சென்னை: நடிகர் அருண் விஜய் இன்று (நப்வ.19) தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 40க்கும் மேற்பட்டோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் ரசிகர்களின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. இதுபோன்று தொடர்ந்து நடத்துவது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதனை பார்த்து இன்னும் நிறைய பேர் இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக தான் இதனை நடத்துகிறோம். அதன் முக்கியத்துவம் என்ன என்பது நன்றாக தெரியும். எனவே ஆரோக்கியமாக இருப்பவர்கள் அனைவரும் இரத்த தானம் செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை என்றார்.
மேலும் அனைத்து வருடமும் ஆதரவற்ற குழந்தைகளோடு தான் என்னுடைய பிறந்தநாள் விழா தொடங்கும். அதன் பிறகு தான் இந்த மருத்துவமனைக்கு வந்து ரத்த தானம் செய்வேன். மாணவர்கள், இளைஞர்கள் என அதிகமானோர் போதை பழக்கத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் எனவே அதில் இருந்து அவர்கள் வெளியே வர வேண்டும். அதற்கு பெற்றோர்கள், நண்பர்கள் அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும்.
என் பிறந்தநாளை முன்னிட்டு ’வணங்கான்’ பட வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் சினிமா வாழ்வில் ’வணங்கான்’ மிக முக்கியமான படமாக அமையும் என்று நம்புகிறேன்" என்றார். பாலா படம் என்றாலே கஷ்டமாகத்தான் இருக்கும் என்று சொல்வார்களே என்ற கேள்விக்கு, "இஷ்டப்பட்டு பண்ணியதை கஷ்டம் என்று சொல்ல முடியாது.
நடிப்பு என்பது என்னுடைய வேலை அதை நான் இஷ்டப்பட்டு செய்கிறேன். எனவே எனக்கு அதில் கஷ்டமாக தெரியவில்லை" என்றார். சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது, அது குறித்து உங்கள் கருத்து என்ற கேள்விக்கு, "ஒரு நல்ல விஷயத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி செய்து வருகிறோம். சினிமா பற்றி வேறொரு இடத்தில் பேசுகிறேன் என்று அந்த கேள்வியை தவிர்த்து விட்டார்.
இதையும் படிங்க: 'கங்குவா' எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலி: 12 நிமிட காட்சிகள் நீக்கம் எனத் தகவல்!
மேலும் அஜித் சார் உச்ச நடிகர் அவருக்கு யாரும் போட்டி கிடையாது. அதுமட்டுமில்லாமல் அவருடைய ரசிகர்கள் என்னை அவ்வளவு நேசிக்கிறார்கள். போட்டி எதுவும் கிடையாது என்றவர் நடிகர் விஜய் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்